×

தமிழ்நாட்டில் 25 இடங்களில் நாட்டுப்புற கலைப்பயிற்சி மையம்

சென்னை: 2023-2024 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் போது, நாடடுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும், இப்பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களிலும் செழித்தோங்கவும், மாநிலம் முழுவதும் 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், அரசாணை(நிலை) எண்.330, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, நாள்.8.9.2023 வாயிலாக ஆணை வெளியிடப்பட்டது.

அதில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரிகளிலும், சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளிலும், மாமல்லபுரம் அரசினர் கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியிலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், சீர்காழி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், இராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் செயல்படும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகளிலும் மற்றும் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் ஆகிய 25 இடங்களிலும் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் நான்கு வகையான நாட்டுப்புறக் கலைகளில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடத்தப்படவுள்ளது.

25 நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்களிலும், ஒரு மையத்தில் நான்கு பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்றுநர்கள் என 100 பணியிடங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.7,000/-மதிப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளன. தகுதியும், திறமையும் 25 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் அல்லது தகுதியும் திறமையும் கொண்ட 50 வயதிற்கு மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் இப்பணியிடத்திற்கு 5.1.2024-க்குள் விண்ணப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணியிடங்கள் குறித்த விவரங்கள், விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, விண்ணப்பம் ஆகியவற்றை கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அடிப்படையில், துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தகுதி வாய்ந்த கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 25 இடங்களில் நாட்டுப்புற கலைப்பயிற்சி மையம் appeared first on Dinakaran.

Tags : Folk Art Festival Centre ,Tamil Nadu ,Chennai ,Folk Art Training Centre ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்